‘பரங்கிப்பேட்டையில், ‘தர்மம் செய்வோர் குழுமம்’ என்று ஒரு அமைப்பு இருக்கிறது. இன்னதான் என்றில்லாமல் ஏகப்பட்ட சேவைகளை இந்தக் குழுமம் செய்து வருகிறது. அதை நீங்கள் நிச்சயம் நமது வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ வாசகர் அந்துன் அஷ்ரப், ‘தி இந்து – இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் இப்படிச் சொல்லி இருந்தார்.

தர்மம் செய்வோர் குழுமம்

‘பரங்கிப்பேட்டையில், ‘தர்மம் செய்வோர் குழுமம்’ என்று ஒரு அமைப்பு இருக்கிறது. இன்னதான் என்றில்லாமல் ஏகப்பட்ட சேவைகளை இந்தக் குழுமம் செய்து வருகிறது. அதை நீங்கள் நிச்சயம் நமது வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ வாசகர் அந்துன் அஷ்ரப், ‘தி இந்து – இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் இப்படிச் சொல்லி இருந்தார்.

மொத்தம் 14 பேர்

தர்மத்தின் சிறப்பு வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது என்பார்கள். அதற்கு அப்பட்டமான உதாரணம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ள தர்மம் செய்வோர் குழுமம். தாங்கள் செய்த உதவி குறித்த செய்தியை இவர்கள் பகிர்ந்து கொள்வதை பார்த்தாலே இவர்களின் தன்மை புரிந்துவிடும். இன்று இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த சிறிய தொலைக்காட்சி பெட்டி இந்தப் பகுதியில் உள்ள ஒருவருக்கு அளிக்கப்பட்டது. இப்படித்தான் இருக்கிறது இவர்கள் தரும் செய்தி அறிக்கை. அந்த உதவி யாருக்கு யாரால் அளிக்கப்பட்டது என்ப தெல்லாம் பகிரப்படுவதில்லை.

பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை வசதியானவர்களிடமிருந்து பெற்று அளிக்கும் சிறிய குழுதான் இந்த தர்மம் செய்வோர் குழுமம். இந்தக் குழுவில் மொத்தம் 14 பேர் இருக்கிறார்கள். இதில் இரண்டு பேர் இளைஞர்கள். மற்ற அனைவருமே மாணவர்கள்.

ஒருபிடி சதகா திட்டம்

யார் உதவியது, யார் உதவியைப் பெற்றுக் கொண்டார்கள் என்பது இருதரப்புக்கும் தெரியக்கூடாது என்பதில் இவர்கள் கண்ணும் கருத்துமாக இருக் கிறார்கள். இவர்கள் மீதிருக்கும் நம்பிக்கையால், உதவி செய்வோர் யாரும் அந்த உதவி யாருக்குப் போய் சேர்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் விரும்புவதில்லை.

அப்படி என்னதான் சேவை செய்கிறார்கள் இவர்கள்? இன்னதுதான் என்றில்லை, எதெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்கிறார்கள். சொல்லப்போனால் இவர்கள் செய்யும் உதவிகள் எல்லாமே உதவி செய்ய விரும்புகிறவர்களுக்கான புது அகராதியாக விரிகிறது. உதாரணத்துக்கு, ஒருபிடி சதகா (அரிசி) திட்டம். பரங்கிப்பேடை, கிள்ளை பகுதிகளில் வசிக்கும் ஏழைகளின் உணவுக்காக இவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் திட்டம் இது.

இதற்காக 500 பிளாஸ்டிக் வாளிகளை வாங்கி பரங்கிப்பேட்டையில் உள்ள வசதியான, நடுத்தர வீடுகளில் வைத்திருக்கிறார்கள். இவர்களின் வேண்டுகோளை ஏற்று, அந்த வீடுகளில் தினமும் சமையலுக்கு அரிசி எடுக்கும் போது ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து அந்த வாளியில் போடுகிறார்கள். மாதத்தின் முதல் வாரத்தில் அரிசி நிரம்பிய அந்த வாளிகளை எல்லாம் எடுத்து வந்து ஒன்று சேர்த்து அவற்றை ஐந்து கிலோ கொண்ட பாக்கெட்டுகளாக போட்டு ஏழைகளின் வீடுகளுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கிறார்கள்.

மணமக்கள் சதகா திட்டம்

அடுத்த திட்டம் இன்னும் அசத்தலானது. மணமக்கள் சதகா திட்டம். பரங்கிப்பேட்டைப் பகுதிகளில் ஓரளவுக்கு வசதியான வீட்டு திருமணங்களில் கூடு தலாக ஒரு வட்டா பிரியாணி சமைக்கும்படி இவர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை ஏற்று, இப்போது இந்தப் பகுதியில் நடக்கும் பெரும்பாலான திருமணங்களில் 100 பேருக்கான பிரியாணி கூடுதலாகவே சமைக்கப்படுகிறது. அதையும், திருமணத்தில் இயல்பாகவே மீதமாகும் பிரியாணியையும் இவர்களே ஆட்டோக்களில் எடுத்துச் சென்று ஏழைக் குடியிருப்புகளுக்குத் தருகிறார்கள்.

கோடையில், பேருந்துநிலையம், மருத்துவமனை, நீதிமன்றம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடுமிடங்களில் மினரல் வாட்டர் கேன் வைத்து தாகம் தீர்க்கிறது இந்தக் குழுமம். அடுத்தது மழலைகள் சதகா திட்டம். மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே துளிர்க்க வேண்டும். இந்தப் பண்பை வளர்ப்பதற்காக 200 உண்டியல்களை வாங்கி குழந்தைகள் உள்ள வீடுகளில் கொடுத்திருக்கிறார்கள். அந்த உண்டியல்களில் குழந்தைகள் பணம் சேர்க்கிறார்கள். உண்டியல் நிரம்பியதும் அதை இந்தக் குழுமத்திடம் தருகிறார்கள். குழந்தைகள் குருவி போல் சேகரித்துக் கொடுத்த பணத்தை ஏழைகளின் கல்வி, மருத்துவ செலவுகளுக்குச் செலவு செய்கிறது தர்மம் செய்வோர் குழுமம்.

உறுதுணையாய் நிற்கிறார்கள்

இலவசமாக வீடுகட்டித்தரும் திட்டம், கழிப்பறைகள் கட்டும் திட்டம், தண்ணீர் பஞ்சம் போக்கும் திட்டம் என்று இவர்கள் செய்யும் ஏழைகள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்துக்கும் பரங்கிப்பேட்டையின் உதவும் உள்ளங்கள் உறுதுணையாய் நிற்கிறார்கள். இத்தனையும் செய்யும் இந்த நல்ல மனிதர்களை சந்திக்கலாமே என்று நானும் தேடிப்போனேன். ஒரு ஜவுளிக்கடையை காட்டி இதுதான் தர்மம் செய்வோர் குழுமத்தின் அலுவலம் என்றார்கள். நான் போனபோது, குழுமத்தின் தலைவர் தமீமுன் அன்சாரியும் செயலாளர் முகமது ஹாஜி அலியும் அங்கு இருந்தார்கள். அவர்களிடம் என்னை நான் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்த போதே இளைஞர் ஒருவர் அங்கு வந்தார்.

வந்தவர், அங்கே கொத்துக் கொத்தாக தொங்கிக் கொண்டிருந்த சட்டைகளில் தனக்கு விருப்பமான இரண்டை தேர்ந்தெடுத்தார். ‘பேன்ட் பார்க்கிறீங்களா..?’ என்று தமீமுன் அன்சாரி கேட்டதும் ‘பார்க்கணும்’ என்றபடியே, அங்கே அடுக்கி வைத்திருந்த பேன்ட்களில் இரண்டை தனக்காக தேர்வு செய்தார் இளைஞர். அவற்றையெல்லாம் ஒரு ‘பிக் ஷாப்பர்’ பையில் போட்டுக் கொடுத்து அந்த இளைஞரை கைகூப்பி வழியனுப்பி வைத்தார் அன்சாரி.

ஜன்னத்துல் ஆடை திட்டம்

Free Clothes

“பேன்ட் ஷர்ட்டுக்கு பணம் வாங்கலியா..?” என்றேன் எதுவும் புரியாதவனாய். அப்புறம்தான் தெரிந்தது – அது குழுமம் நடத்தும் இலவச ஆடையகம் என்பது. ஜன்னத்துல் ஆடை திட்டம் என்ற இத்திட்டத்துக்காக, வசதியான வீடுகளில் இருந்து கறையில்லாத, கிழியாத துணிகளை வாங்கிவந்து தங்கள் அலுவலத்தில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். ஏழைகள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து தங்களுக்கு தேவையான ஆடைகளை எடுத்துச் செல்லலாம் – இலவசமாக!

இத்தனையும் செய்யும் இவர்கள், ‘ரெட்நோவா’ என்ற திட்டத்தின் கீழ், ரத்ததான சேவையும் செய்கிறார்கள். ஏழைகள் யாராவது காலில் செருப்பில்லாமல் கஷ்டப்பட்டு நடந்து சென்றால் அப்போதே அவர்களை கடைக்கு அழைத்துச் சென்று செருப்பு வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார்கள். மளிகைப் பொருட்கள் வாங்கவே வசதியில்லாத குடும்பங்கள் இருப்பது தெரிய வந்தால் ஒரு மாதத்துக்கான பொருட்களை வாங்கிச் சென்று இரவில் அவர்கள் வீட்டு வாசலில் வைத்து, கதவை தட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவது இவர்களின் உயரிய பண்பு. இதுமட்டுமல்ல.. பள்ளிக்கூட கட்டணம், நோட்டு புத்தகம் என உதவி தேவைப்படுவோரை தேடித் தேடிப் போய் உதவுகிறார்கள்.

வாட்ஸ் – அப்பில் பகிர்ந்தால்..

“இதெல்லாம் எப்படி சாத்தியம்?” வியந்து போய் கேட்டேன். பதில் சொன்னார் தமீமுன் அன்சாரி. சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தந்தால் எந்த மனிதனுக்கும் உதவும் ஈகை குணம் இயல்பாக வந்துவிடும். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். ஒரு குடும்பத்துக்கு இதுதேவை என்று நாங்கள் வாட்ஸ் – அப்பில் பகிர்ந்தால், இரண்டு பேர் உதவ ஓடி வருகிறார்கள். அதே போல, தங்களிடம் இன்னின்ன பொருள்கள் உள்ளது என்பதையும் ஈகையாளர்களும் வாட்ஸ் – அப்பில் பகிர்கிறார்கள்.

அவர்கள் தரும் உதவிகளைப் பெற்று, உரியவர்களுக்கு குறிப்பாக வரியவர்களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் எங்களது வேலை. உதவியை பணமாகத் தந்தால் அதற்கான பொருளை வாங்கி உரியவரிடம் சேர்த்துவிட்டு, அதற்கான ரசீதை கொடையாளரிடம் சேர்த்துவிடுவோம்” என்றார் தமீமுன் அன்சாரி.

இறைவன் வெகுமதி தருவான்

அன்சாரி பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணி செய்கிறார். விடுமுறை தினங்களில் பரங்கிப்பேட்டைக்கு வந்து இந்த சேவைகளை கவனிக்கிறார். அவர் ஊரில் இல்லாத நாட்களில் குழுமத்தின் செயலாளர் முகமது ஹாஜி அலி முன் நிற்கிறார். இத்தனை பெரிய சேவைகளைச் செய் தாலும் எதையும் இவர்கள் மேடைபோட்டு முழங்குவதில்லை.

ஏன் என்று கேட்டால், “நாங்கள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஏழைகளுக்கு தர்மம் செய்ய நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கிறோம்; அவ்வளவுதான். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் உரிய வெகுமதியை இறைவன் நமக்குத் தருவான். இதற்கிடையில் மேடை எதற்கு.. விழா எதற்கு?” என்று அடக்கமாக பதில் சொல்கிறது தர்மம் செய்வோர் குழுமம்.